வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கூடுதல் போலீசாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
வால்பாறை
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கூடுதல் போலீசாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
கோவை மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக வால்பாறை விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அதன்படி வால்பாறை பகுதிக்கு கடந்த 10 நாட்களாக சமவெளி பகுதியில் ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதன் காரணமாகவும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வர தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் எந்தவித சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடுதல் போலீசார்
இதுகுறித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-வால்பாறை நகரில் ஒரேயொரு மெயின் ரோடுதான் உள்ளது. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கோடை விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் அல்லது கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் வால்பாறை நகர் சிக்கி தவிக்கிறது. இனிவரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசாரை நியமித்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.