ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்


ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் வார விடுமுறை மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வு முடிந்து விட்டதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அங்கு கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். இதேபோல் ரோஜா பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்கள் பார்வையிட்டதுடன், செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால் சுற்றுலா பயணிகள் பிற சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கூடலூரில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் பஸ் நிலையம் பகுதிக்கு மாற்றி விட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் சிரமம் அடைந்தனர். ஊட்டியில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

கூடுதல் ஊழியர்கள்

கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு அதிகம் பேர் வந்தனர். இதனால் நேற்று மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு பகுதியில் இருந்து 18 கி.மீ. தூரமுள்ள கூடலூர் வரை மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் கூடலூர் நகருக்குள் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில வாகனங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் போலீசார் ஷிப்ட் முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து அதிக சுற்றுலா வாகனங்கள் வருவதால், அதற்கு இணையாக நுழைவு வரி வசூலிக்கும் பணியில் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் கூடலூர்-கேரள மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சீசன் காலத்தில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேலும் சீசன் காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story