தேரடி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலை மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினால் தேரடி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினால் தேரடி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிமெண்டு சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சரால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதிகளில் பக்க கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரையில் நேற்று சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியின் காரணமாக பே கோபுரத் தெரு, பெரிய தெரு மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றத்தினால் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் இருந்து தேரடி வீதிக்கு வரும் வாகனங்களும், தேரடி வீதியில் செல்லும் வாகனங்களும் பெரிய தேரின் அருகில் சந்திப்பதால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையாக அணிவகுத்து நின்றது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் எதிர்புறம் இருபுறமும் வாகனங்கள் சீராக சென்று வரும் வகையில் சாலையில் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் எதிர் திசையில் செல்வதால் முறையாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 6-ந் தேதி இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது குறுகலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதிகளில் போலீசாரை அமர்த்தி உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆனால் தேரடி வீதியில் போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் நியமிக்கப்படாததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சீர் செய்ய முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
எனவே இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பணிக்கு அமர்த்தி உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.