கோவையில் பைக் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விதிமுறை அமலுக்கு வந்தது


கோவையில் பைக் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விதிமுறை அமலுக்கு வந்தது
x

கோவையில் பைக் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

கோவை,

கோவையில் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் பைக் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை சார்பாக தற்போது சாலை பாதுகாப்பினை உறுதி செய்யவும், சுற்று சூழலை பாதுகாக்கவும், மோட்டார் வாகன சட்டங்கள் கடுமையாக பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்சசியாக, விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஆகியோர்கள் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.

எனவே கோவையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்லுவோரும் 26-ந் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்தது.

இதையடுத்து கோவையில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு சென்றதை சாலைகளில் காண முடிந்தது. இது தவிர பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களை பிடித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் ஹெல்மெட் அணிந்து செல்வேன் என்று உறுதிமொழியும் எடுக்க வைத்தனர். இந்த விழிப்புணர்வானது ஒரு வாரம் மட்டுமே வழங்கப்படும் தொடர்ந்து பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் மற்றும் வழக்கு பதிவு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story