களைக்கொல்லி மருந்து மானிய விலையில் வழங்க வேண்டும்


களைக்கொல்லி மருந்து மானிய விலையில் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 4 July 2023 6:30 PM GMT (Updated: 5 July 2023 9:31 AM GMT)

களைக்கொல்லி மருந்து மானியவிலையில் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், அகரம் வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் திருக்குமரேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

மானிய விலையில் மருந்து

கோவிந்த ரெட்டிபாளையம் பகுதியில் குறைந்த ழுத்த மின்சாரமே கிடைக்கிறது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. கடந்த ஓராண்டாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் பயிரிடும் பயிர்கள் பூச்சிகளால் நாசமாகின்றன. பூச்சிகளை அழிக்க களைக்கொல்லி மருந்து வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே களைக்கொல்லி மருந்தை மானிய விலையில் வழங்க வேண்டும்.

ஆதார் கார்டுகளுடன் பான் கார்டுகளை இணைக்க கால அவகாசம் வழங்க வேண்டும். தாமதமாக இணைக்கும் பொது மக்களிடம் இருந்து ரூ.1,000 வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். அகரம் பகுதியில் சுமார் 2.50 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். உடனே வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு

மகமதுபுரம் கிராமத்தில் சுமார் 7.50 ஏக்கர் தோப்பு புறம்போக்கு உள்ளது. அதை ஒரு சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். அந்த இடத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்தின் முன் அந்தப் பகுதியில் உள்ள டி.சி. நிலம் பற்றிய விவரத்தை தகவல் பலகையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது விவசாய சங்கத்தின் சார்பில் வழக்குகள் தொடரப்படும் என விவசாயி ஒருவர் கூறினார்.


Next Story