உள்ளாவூர் ஊராட்சியில் மூலிகைச்செடிகள் நாற்றங்கால் பண்ணை
உள்ளாவூர் ஊராட்சியில் மூலிகைச்செடிகள் நாற்றங்கால் பண்ணையை கலெக்டர் திறந்துவைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா உள்ளாவூர் ஊராட்சியில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பங்களை சேர்ந்த 12 மகளிரை உறுப்பினர்களாக சேர்த்து உள்ளாவூர் பழங்குடியினர் மூலிகை பண்ணை வளர்ப்பு தொழிற்குழு உருவாக்கப்பட்டு ரூ.75 ஆயிரம் நிதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சமுதாய திறன் பள்ளி பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து இந்த குழுவின் தொழில் வளர்ச்சிக்காக விரிவான தொழில் திட்டம் தயார் செய்து அரசின் ஒப்புதலுடன் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் பெறப்பட்டு உள்ளாவூர் ஊராட்சியின் மூலம் 1 ஏக்கர் 23 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் மூலிகை பண்ணை அமைக்கப்பட்டது.
பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் மேம்பட அமைக்கப்பட்ட மூலிகை நாற்றங்கால் பண்ணையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உள்ளாவூர் ஊராட்சியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நல அலுவலர் பிரகாஷ் வேல், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், வாலாஜாபாத் தாசில்தார் சுபபிரியா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் முனுசாமி, திட்ட செயல் அலுவலர்கள், வட்டார அணித் தலைவர் மற்றும் தொழிற்குழு உறுப்பினர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.