உருளைக்கிழங்கு மூட்டைகளில் மறைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகிரி பகுதியில் உருளைக்கிழங்கு மூட்டைகளில் மறைத்து வைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதி வழியாக சிலர் கஞ்சா கடத்தி செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார், தனிப்படை போலீசார் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பகுதியில் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒடிசா மாநிலம் பலங்கேரி பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் செல்வதற்காக லோடு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
100 கிலோ பறிமுதல்
புளியங்குடி கற்பகவீதி தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 29) என்பவர் லோடு வேனை ஓட்டி வந்தார். இவருக்கு உதவியாளராக கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சியாஸ் பஷீர் (25) உடன் வந்தார்.
லோடு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு மூட்டைகள் இருந்தது. அதை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு மத்தியில் பல பொட்டலங்கள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அனைத்தும் கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, லோடு வேனுடன் அதில் இருந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி மதுவிலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு பழனிக்குமார், புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் ஆகியோர் சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயகாளீஸ்வரி முன்பாக போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முருகானந்தம், சியாஸ் பஷீர் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.