குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட பெண் இறந்தது குறித்து விசாரிக்க சிறப்பு குழு


குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட பெண் இறந்தது குறித்து விசாரிக்க சிறப்பு குழு
x

குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்ட பெண் இறந்தது குறித்து விசாரிக்க டாக்டர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மதுரை,

குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்ட பெண் இறந்தது குறித்து விசாரிக்க டாக்டர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை

தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த பூங்கொடி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது 2-வது மகள் கனிமொழிக்கு திருமணமாகி, ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ளனர். மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்தார்.

கடந்த 8.6.2022 அன்று அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து பொது வார்டுக்கு அவரை மாற்றினர். அங்கு அவருக்கு ஊசி செலுத்தப்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார். பின்னர் அவரை அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று சில நாட்கள் வைத்திருந்தனர். அவர் சுயநினைவின்றி இருந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார் என டாக்டர்கள் கூறினர். அவர் இறந்ததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

உடலை வாங்குமாறு மிரட்டல்

அதுமட்டுமல்லாமல், டாக்டர்களும், போலீசாரும் எனது மகள் உடலை பெற்றுக்கொள்ளும்படி மிரட்டினர். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து, கனிமொழியின் உடலை பெற்று அடக்கம் செய்தோம். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் எனது மகள் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்யவும், கனிமொழியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆவணங்கள் தாக்கல்

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மகள் சிகிச்சை பெற்றது குறித்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி தேனி அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

சிறப்பு விசாரணைக்குழு

விசாரணை முடிவில், மனுதாரரின் மகள் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் இருதயவியல் துறை தலைவர்கள் அடங்கிய டாக்டர்கள் குழுவை, சுகாதாரத்துறை செயலாளர் அமைக்க வேண்டும். இந்த குழு, உரிய ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை ஒரு மாதத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story