வியாபாரியின் மனைவிக்கு இழப்பீடு வழங்க 4 வாரத்தில் முடிவு


வியாபாரியின் மனைவிக்கு இழப்பீடு வழங்க 4 வாரத்தில் முடிவு
x

வியாபாரியின் மனைவிக்கு இழப்பீடு வழங்க 4 வாரத்தில் முடிவு செய்ய உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


மதுரை, முடக்காத்தான் பகுதியைச் சேர்ந்த கஜபிரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் கணவர் விவேகானந்தகுமார், மதுரை சிம்மக்கல் பகுதியில் கடை வைத்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டில் அவர் கடையை மூடிவிட்டு நள்ளிரவு 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் கடையில் வேலைபார்த்தவரும் வந்தார்.

வைகை ஆற்றுப்பாலத்தை கடந்தபோது அங்கு நின்றிருந்த போலீசார் லத்தியை காட்டி என் கணவரை நிறுத்தியுள்ளனர். இதில் என் கணவரும், அவருக்கு பின்னால் இருந்தவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே மருத்துவமனை இருந்தும் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் என் கணவர் உயிரிழந்தார். என் கணவர் இறப்புக்கு போலீசாரே காரணம். கணவர் இறப்பால் நானும், குழந்தையும் சிரமத்தில் வாடுகிறோம். எங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் கல்வித்தகுதிக்கு ஏற்ப எனக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் தன் கணவர் இறப்பு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் அவர் தனியாக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். முடிவில், மனுதாரரின் கணவர் இறந்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. இதனால் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டியதில்லை. இருப்பினும் அந்த வழக்கை கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் முடிக்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உள்துறை செயலாளர் 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story