வனஉரிமை சான்றுக்கு தலைமுறைகள் கடந்தும் போராடும் மலைவாழ் மக்கள்வருமானம், வளர்ச்சியின்றி பரிதவிப்பு
வனஉரிமை சான்றுக்கு தலைமுறைகள் கடந்தும் மலைவாழ் மக்கள் போராடி வருகிறாா்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்வராயன் மலை. இந்த மலையை கடந்த காலத்தில் பெரியண்ணன், சின்னண்ணன், குறும்பகவுண்டன், சடையகவுண்டன் அரியகவுண்டன் ஆகிய 5 சகோதரர்களும் சமமாக பிரித்து, நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஜாகீர்தாரர்கள் மற்றும் ஜமீன்தாரார்களின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மலை வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது முதல் மலைவாழ் மக்கள் அவரவர் உழவு செய்து வந்த விவசாய நிலங்களை, அவர்களே அனுபவித்து வந்தார்கள்.
வனத்துறையின் அனுமதி கட்டாயம்
இந்த நிலையில், 1976-ம் ஆண்டு இந்த மலை ஜாகீர்தாரர்களிடமிருந்து அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அதன் பிறகு மலைவாழ் மக்கள் அனுபவித்து வந்த நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிலங்களுக்கு மட்டுமே வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலங்களை பட்டா இல்லாமலே அப்பகுதி மக்கள் அனுபவித்து வந்தனர்.
இதனால், அந்த நிலத்தில் கிணறு வெட்டுவது, பொக்லைன் எந்திரங்களை கொண்டு நிலத்தை சரி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும்.
குறிப்பாக விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வசதி பெற வேண்டும் என்றாலும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற வேண்டுமென்றாலும் வனத்துறையினரை தான் அப்பகுதி மக்கள் அணுக வேண்டிய நிலை உள்ளது.
இதன் மூலம் வனத்துறையினரின் ஒப்புதல் இல்லாமல் மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களை சுயமாக பயன்படுத்த முடியாத நிலையே இன்றும் நீடித்து வருகிறது. இதனால் தங்களது ஆதாரமாக உள்ள விவசாயத்தின் மூலம் வருமானத்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று சாலை வசதியும் இங்கு கிடையாது. இதற்கும் வனத்துறையின் அனுமதி தேவை என்ற நிலை தொடர்கிறது. கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையானது சாலைவசதி, அதுவும் கிடைக்காததால் கிராமங்களின் எவ்வித வளர்ச்சியும் எட்டாத நிலையில் இருக்கிறது.
தலைமுறைகள் கடந்தும் போராட்டம்
இதில் இருந்து விடுபட்டு, விவசாய பணியை இன்னும் அதிகரித்து வருவாயை அதிகரிக்க மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் விளைநிலங்களுக்கு வன உரிமைச் சான்று கேட்டு தமிழக அரசுக்கும், வனத்துறையினருக்கும் பல தலைமுறையாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரைக்கும் சான்று கிடைக்கவில்லை. பல தலைமுறைகள் கடந்தும் இவர்களது போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உதயமாகிய பிறகு மலைவாழ் மக்கள் தரப்பில் வன உரிமை சான்று கேட்டு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தகுதியான 3000 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணை கலெக்டர் கையெழுத்திட்டு மாவட்ட வன அலுவலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இவ்வாறு அனுப்பப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்று வரை மாவட்ட வன அலுவலர் கிடப்பில் வைத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் தங்களது விவசாய பணியை மேலும் அதிகரிக்க நிலத்தில் கிணறு வெட்ட முடியாமலும் அவர்களுக்கு உண்டான நிலங்களை முறையாக அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
உடனடி தீர்வு வேண்டும்
இது பற்றி பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் கூறியதாவது:-
இந்த மலைவாழ் மக்கள் வன உரிமை சான்று கேட்டு தலைமுறை தலைமுறையாக காத்திருந்து வருகிறார்கள். தற்போது, அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கண்டு, தகுதியான நபர்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும், மாவட்ட வன அலுவலகம் இல்லை. மாவட்ட வன அலுவலரை சந்திக்க வேண்டும் என்றால் சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரத்திற்கு தான் செல்ல வேண்டி உள்ளது. ஆகையால், மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தையும் இங்கு அமைக்க வேண்டும்.
முட்டுக்கட்டை போடும் வனத்துறை
ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ்:-
கல்வராயன்மலையில் உள்ள சுமார் 50 கிராமத்திற்கு இன்று வரை சாலை வசதிகள் இல்லை. ஊரக வளர்ச்சித் துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தாலும் வனத்துறையினரின் அனுமதியும் பெற வேண்டிய நிலை உள்ளதால் சாலை போட முடியாத நிலை இருக்கிறது.
குண்டும் குழியுமாக உள்ள சாலைகைளை மலைவாழ் மக்கள் தாமாகவே அவ்வப்போது சரிசெய்து, அந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
அதுவே மாவட்ட வன அலுவலர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் இருந்தால் ஊரக வளர்ச்சித் துறையினர் எளிதாக மாவட்ட வன அலுவலரை சந்தித்து சாலைகள் அமைக்க அனுமதி பெற்று சாலைகள் அமைக்கும் பணியும் தொடங்கி இருக்கும். இவ்வாறாக மலைவாழ் மக்கள் பல இன்னல்களை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். இதற்கு முட்டுக்கட்டை போடுவது போன்றே வனத்துறையும் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.