இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் கடம்பூர் மலைக்கிராமங்கள்- போதிய பஸ் வசதி இல்லாததால் தவிக்கும் மக்கள்
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் கடம்பூர் மலைக்கிராமங்கள்- போதிய பஸ் வசதி இல்லாததால் தவிக்கும் மக்கள்
ஈரோடு மாவட்டம் மலைகளும், காடுகளும் அதிகம் உள்ள பகுதி. ஆபத்தான மலை உச்சிகளிலும் மக்கள் வசிக்கும் வித்தியாசமான புவியியலை உடையது இந்த மாவட்டம்.
கடம்பூர் மலை
மலைகளில் குட்டி இளவரசியாக விளங்கும் தாளவாடி. ஒரு ஊராட்சி ஒட்டு மொத்தமாக பரந்து விரிந்து கிடக்கும் பர்கூர் என்று மலைவாழ் தலங்களுக்கு சற்றும் குறைவின்றி அழகுக்குவியலை அள்ளி தன்னகத்தே வைத்திருக்கும் மலையாக அமைந்திருக்கிறது கடம்பூர் மலை. சத்தியமங்கலம் நகரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கடம்பூர்.
சத்தியமங்கலம்-அத்தாணி ரோட்டில் டி.ஜி.புதூர் நால்ரோட்டில் இருந்து கெம்பநாயக்கன்பாளையம் சாலையில் இருந்து தொடங்குகிறது கடம்பூர் மலைப்பயணம். கெம்பநாயக்கன்பாளையம் எல்லையில் வனத்துறை சோதனைச் சாவடிக்கு வந்து விட்டால் ஒரு அழகிய மலைப்பயணத்தை தொடங்கிவிடலாம். சாலையோரத்தில் அமர்ந்து பயணிகளுக்கு காட்சி தரும் காவல் தெய்வங்களை பார்த்து ஆசி பெற்றுவிட்டால் மலைப்பயணம் சுகமாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கை.
மலை அடுக்குகள்
2 பக்கமும் சாலையை சூழ்ந்த மரங்கள். நீண்ட கூந்தல் விரிந்து கிடப்பது போன்ற கருமை நிறத்தில் வளைந்து நெளிந்து செல்லும் ரோடு, நிஜமாகவே முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் செந்தாழம் பூவில்... பாடலை நினைவூட்டி உதடுகளையும் அசையச்செய்கின்றன.
கெம்பநாயக்கன்பாளையம் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் பயணம் இந்த ஒற்றைப்பாதையில்தான். சாலையில் சற்று தூரம் சென்று விட்டாலே சமவெளியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பாதையின் அனுபவம் கிடைத்து விடுகிறது. ஒரு புறம் மலை அடுக்குகள், மறுபுறம் அதல பாதாளம். கண் உயர்த்தி பார்த்தால் சற்று தொலைவிலேயே ஓங்கி உயர்ந்து நிற்கும் கல்பாறைகள். பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட சாலையில் கவனமாக சென்று, வளைவுகளில் மெல்ல திரும்பி, மழைக்கால திடீர் ஓடைகளை கடந்து எதிர்பாராத திரில் அனுபவம் இந்த பயணத்திலும் கிடைக்கிறது.
கண்ணுக்கு விருந்து
சற்று தொலைவில் பெரும்பள்ளம் அணைக்கட்டு முழுமையாக கண்ணுக்கு விருந்தளிக்கிறது. அணைக்கட்டு பகுதியை ஒட்டி ஏரி போல் வெள்ளம் தேங்கிக்கிடக்க, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்காலிக விவசாய பூமியாக மாறி இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து பிறக்கும் மலைகள் போன்று அங்கிருந்து பசுமை போர்த்தி உயரும் மலைகளின் அழகு. கண் கேமராவுக்குள் அடங்காமல் விரிகிறது. மேகம் மோதும் உயர்ந்த மலைகள் 5 அடுக்காக நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே நிற்கலாம் என்றால் யானைகள் உலவும் பகுதி என்ற எச்சரிக்கை நெஞ்சை கவ்வுகிறது.
தாளவாடி மலைப்பயணத்தில் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும். இந்த மலைப்பாதையில் இருந்து சமவெளியை பார்த்தால் பவானிசாகர் அணை தெரியும். பர்கூர் மலைப்பயணத்தில் வரட்டுப்பள்ளம் அணையை கடந்தே பயணம் தொடங்கும். கடம்பூர் மலையும் சற்றும் குறைவின்றி பெரும்பள்ளம் அணைக்காட்சியை அழகாக தருகிறது.
இந்த சாலையிலும் அறிவிக்கப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் 2 உண்டு. ஆனால் அறிவிக்கப்படாத பல வளைவுகள் கொண்டை ஊசி வளைவுகளுக்கு நிகரான பயண அனுபவத்தை தருகின்றன. வளைவுகளில் சத்தம் எழுப்ப வேண்டும் என்பது இங்கு வாகனம் ஓட்டும் பலருக்கும் தெரியாது என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாகவே செல்ல வேண்டும்.
நகரம்
குறுகிய சாலைகள் சமீபத்தில் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அச்சமில்லாத பயணம். மலையடிவாரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் கடந்து விட்டால் நகரம் ஒன்று வரவேற்கிறது. அதுதான் கடம்பூர்.
கடம்பூர் மலையில் 3 கிராம ஊராட்சிகள் உள்ளன. குத்தியாலத்தூர், மாக்கம்பாளையம், திங்களூர் ஊராட்சிகள் உள்ளன. குத்தியாலத்தூர் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியின் தலைமை இடமாக திகழ்வது கடம்பூர். இங்கு ஒரு பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து கடம்பூர் மலைக்கு உள்பட்ட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி இருக்கிறது. உகணியம், நகலூர் கிராமங்களுக்கு சாலை வசதி இருந்தும் பஸ் வசதி இல்லை. இவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு நடந்து கரளையம் வந்து பஸ் ஏறி கடம்பூர் வரவேண்டும். மல்லியம்மன் துர்க்கம் பகுதி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் மலைக்கு மேல் உள்ளது. இங்குள்ள மக்களும் நடந்துதான் கடம்பூர் வரவேண்டும்.
ஆபத்தான நடை பயணம்
மலை கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும் என்று அரசு எத்தனையோ நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அனைத்து கிராமங்களுக்கும் இந்த வசதிகள் கிடைத்துள்ளனவா? என மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவேண்டும். வனவிலங்குகள் நடமாடும் வனச்சாலைகளில் மக்கள் நடை பயணமாக செல்வது ஆபத்தானது. அவர்களுக்கான பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது அரசு அதிகாரிகளின் கடமை. கடம்பூர் மலை கிராம சாலைகளில் பஸ்கள் விரைவில் விடப்படுமா? மலை கிராம மக்களின் மனவேதனை தீருமா?
இது குறித்து மலை வாழ்மக்கள் கூறுகையில், எங்கள் கிராமங்கள் இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளன. ஆனால் பல்வேறு கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. எனவே அதிகாரிகள் பஸ் வசதி உள்பட தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.
களி உருண்டையும்-கருவாட்டு குழம்பும்
கடம்பூர் மலைப்பயணம் செல்பவர்கள், கடம்பூர் சென்றால் சுவைக்க ராகி களியும், கருவாட்டு குழம்பும் அங்குள்ள ஒரு உணவகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மளிகைக்கடை மாடியில் மல்லியம்மன் துர்க்கம் மலையை பார்த்துக்கொண்டே திறந்தவெளி உணவகமாக இது உள்ளது. பொதுவாக களி சாப்பிடுவது எப்படி என்று யோசிப்பவர்கள் கூட, சுவையாக சாப்பிடும் வகையில் பரிமாறுகிறார்கள் தங்கவேல் -ருக்குமணி தம்பதி. 7 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உணவகம் தொடங்கிய அவர்கள், ராகி களி, கருவாட்டு குழம்பு, கோழி குழம்பு கடையாகவே இதை தொடங்கி இருக்கிறார்கள். களி சாப்பிட வரும் பலரும் மதிய சாப்பாடு கேட்க, இப்போது டிபன், மதிய உணவும் கிடைக்கிறது. ஓட்டலில் சாப்பிட்டது போல் இல்லாமல் வீட்டில் சாப்பிட்ட திருப்தி.
இதில் 'ஹைலைட்' களி உருண்டை, கருவாட்டு குழம்பும்தான். சமவெளிப்பகுதியில் இருந்து கடம்பூர் வரும் பலரும் விரும்பி சாப்பிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.








