இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி
கரூரில், நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 32). இவர் கரூர் மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக நேற்று முன்தினம் போலீசார் சக்தியை கைது செய்தனர். இதையடுத்து சக்தி கைது செய்ததை கண்டித்து, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலையில் வெங்கமேடு அய்யப்பன் கோவில் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சக்தி கைது செய்யப்பட்டதையடுத்து இந்து முன்னணியினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.
27 பேர் கைது
இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக நின்ற கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி, கலைந்து செல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாதையடுத்து இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக இந்து முன்னணியை சேர்ந்த 27 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் கரூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.