தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் களை கட்டியதுபரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் களை கட்டியதுபரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் களை கட்டியது. இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு முதல் 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் ஒகேனக்கல் களை கட்டியது.

கார், வேன், பஸ்களில் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, முதலை பண்ணை அருகே உள்ள காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களில் குளித்தனர்.

விற்பனை மும்முரம்

பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன், பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மீன் உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கடைகள், உணவகங்களில் விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க ஒகேனக்கல் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.


Next Story