மருத்துவ காப்பீடு அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்


மருத்துவ காப்பீடு அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்
x

கல்வராயன்மலைப்பகுதி கிராமங்களில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் மலைவாழ்மக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் உள்ள மேல்பரிகம், குண்டியாநத்தம், பெரிய கருவிலாம்படி, சின்னகருவிளாம்பாடி, மட்டப்பாறை, நொச்சிமேடு, கரியாலூர், மேட்டுக்காடு, கொடுந்துறை உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கு நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வந்திருந்தனர். இவர்கள் விண்ணப்ப படிவங்களை கொடுத்து போட்டோ எடுப்பதற்கு பலமணிநேரம் காத்திருந்தனர். இதனால் அவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல காலதாமதம் ஆனதால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, நாங்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு, கூலிவேலைக்கு செல்லாமல் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம். புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் காலதாமதம் ஆனதால் காலையில் வந்த எங்களில் சிலர் மாலையில்தான் வீடுகளுக்கு திரும்பி செல்கிறோம். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. எங்களைப்போல் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். எனவே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் முகாம் அமைத்து மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Next Story