திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தில் உள்ள சக்தி சர்வதேச பள்ளியில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி ஸ்ரீமதி விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் உடற்கூறு ஆய்வு நடந்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில், இன்று (நேற்று) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு யார் பாதுகாப்பு?. ஆகவே நாளை (இன்று) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது. ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு வழங்குவார்கள். தமிழக அரசு இதில் சுமுக முடிவு காண வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதேபோல், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எஸ்.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும், 'இன்று மட்டும் தனியார் பள்ளிகள் இயங்காது' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மாவட்ட தலைவர் ஏலகிரி செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேபோல திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயங்கும் நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கு மேல் பள்ளிகள் இயங்கும் நிலையில் ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் இயக்கம் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பள்ளிகள் தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இதனிடையே எந்த தகவலும் முறையாக கிடைக்கப்பெறாத பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

முன்னதாக விதிகளை மீறி விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story