ஊர்க்காவல் படைவீரர் தூக்குப்போட்டு தற்கொலை

ஊர்க்காவல் படைவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆத்தூர்:-
ஆத்தூரில் ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊர்க்காவல் படைவீரர்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பெரியார் நகர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ஹரிபாபு (வயது 25). இவர் பி.எஸ்சி. பயோடெக் படித்து இருந்தார். திருமணமாகாத இவர் கடந்த ஜனவரி மாதம் ஊர்க்காவல் படையில் தேர்வு பெற்று பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ஹரிபாபு கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இருப்பினும் நோய் குணமாகாததால் ஹரிபாபு மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிபாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களின் ஒரே மகன் ஹரிபாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அவரது பெற்றோரும் மற்றும் உறவினர்களும் ஹரிபாபுவின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.






