கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
அரியலூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
அரியலூர் அரசு கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அரசாணை 248-ஐ ரத்து செய்யக்கோரி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட கவுரவ விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் சரவணன் கூறியதாவது:-
அரியலூர் அரசு கல்லூரியில் 55 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அரசாணை 248-ன் படி கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
பணிநிரந்தம் செய்ய கோரிக்கை
கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி எழுத்து தேர்வு அல்லாமல் பணி மூப்பு அடிப்படையை கணக்கில் கொண்டு கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்த முடிவெடுத்தார். எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களுடைய கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மற்ற மாநிலங்கள் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தது போல் எங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.