திருப்பூர் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும்
திருப்பூர் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
திருப்பூர் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
மருத்துவமனை கட்டிடம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ மருந்துத்துறையின் சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.
தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த 2 புதிய கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் காங்கயம் நகரில் கட்டப்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்த ரூ.12 கோடி மதிப்பீட்டில் 50 கூடுதல் படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைவில் திறப்பு
வட்டார மருத்துவமனையாக இருந்த காங்கயம் மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கு தேவையான புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 20 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தந்துள்ளார். இதற்கான கட்டிட பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டிட பணிகள் முடிந்து திறந்து வைக்கப்படும்.
தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகள் முடிந்து, விரைவில் திறந்து வைக்கப்படும்.
மேலும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.