விதிகளை மீறி கட்டிய விடுதிக்கு 'சீல்'


விதிகளை மீறி கட்டிய விடுதிக்கு சீல்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் விதிகளை மீறி கட்டிய விடுதிக்கு ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் விதிகளை மீறி கட்டிய விடுதிக்கு 'சீல்' வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விதிமீறல் கட்டிடங்கள்

மலைப்பிரதேசமான வால்பாறையில் நகராட்சி நிர்வாகத்தின் விதிகளை மீறி கட்டிய கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கி, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதன் அடிப்படையில் ஏற்கனவே வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் விதிமீறி கட்டிய கட்டிடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட நகர் பகுதியில் மாநில ஊரமைப்பு துறையின் துணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில் விதி மீறி கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது.

உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

இந்த நிலையில் நேற்று கூட்டுறவு காலனி பகுதியில் விதி மீறி கட்டிய ஒரு தங்கும் விடுதிக்கு நகராட்சி பணிமேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கட்டிட பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பின்னர் அதிகாரிகள் கூறும்போது, இனிவரும் நாட்களில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியும், அது குறித்து எந்தவித தகவலும், உரிய விளக்கங்களும் வழங்காத குடியிருப்பு, தங்கும் விடுதி, காட்டேஜ் போன்ற கட்டிடங்களுக்கு மாநில ஊரமைப்பு துறையின் அறிவுரையின்பேரில் சீல் வைப்பதோடு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story