இலங்கை நாட்டினரை கனடாவுக்கு அனுப்ப முயன்ற ஓட்டல் தொழிலாளி கைது


இலங்கை நாட்டினரை கனடாவுக்கு அனுப்ப முயன்ற ஓட்டல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Oct 2023 9:00 PM GMT (Updated: 22 Oct 2023 9:01 PM GMT)

இலங்கை நாட்டினரை கனடாவுக்கு அனுப்ப முயன்ற வழக்கில், ஓட்டல் தொழிலாளியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

தேனி

கனடாவுக்கு செல்ல...

கடந்த 2021-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த 38 பேர், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு இடத்தில் தங்கி இருப்பதாக மங்களூரு தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் மங்களூருவுக்கு வந்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்து அவர்கள், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல இருந்தனர். இவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் மரக்காயம்பட்டியை சேர்ந்த முகமது இம்ரான்கான் (வயது 36) என்பவருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஈசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஓட்டல் தொழிலாளி

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், தன்னை தேடுவதை அறிந்த முகமது இம்ரான்கான் தலைமறைவானார். அவரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வந்து முகமது இம்ரான்கானை தேடினர்.

அப்போது அவர், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தமபாளையத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து முகாமிட்டனர். பின்னர் முகமது இம்ரான்கான் தங்கி உள்ள பகுதிக்கு சென்று அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அவர், உத்தமபாளையம் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

கைது-பரபரப்பு

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனர். பின்னர் ஓட்டலில் உணவு அருந்தும் வாடிக்கையாளர்களை போல் அவர்கள் சென்று அமர்ந்தனர். உணவை ஆர்டர் செய்த அதிகாரிகள் சாப்பிட்டபடி முகமது இம்ரான்கானை நோட்டமிட்டனர்.

அப்போது தாங்கள் தேடுகிற முகமது இம்ரான்கான், அவர் தான் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து ஓட்டலில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட முகமது இம்ரான்கானை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story