சத்தியமங்கலம், பெருந்துறையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்


சத்தியமங்கலம், பெருந்துறையில் உள்ள ஓட்டல்களில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு  கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
x

சத்தியமங்கலம், பெருந்துறையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு

சத்தியமங்கலம், பெருந்துறை பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திடீர் ஆய்வு

நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் 'சவர்மா' உணவு வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி கலையரசி (வயது 14) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே கடையில் 'சவர்மா' உணவு வாங்கி சாப்பிட்டு 43 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதில் 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஓட்டல்களில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி நீலமேகம் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இறைச்சி பறிமுதல்

ஆய்வின்போது ஓட்டல்களில் கெட்டுப்போன கோழி இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் இறைச்சியில் நிறம் ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கலர் பொடி, ருசி ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அஜினமோட்டோ பவுடர் ஆகியவற்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போனதாக 4 கிலோ இறைச்சி, கலர் பொடி, அஜினமோட்டோ பவுடர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆய்வின்போது சத்தியமங்கலம் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் ஆரோக்கியசாமி, மேற்பார்வையாளர்கள் முருகேஷ், கருப்புசாமி, நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

பெருந்துறை

இதேபோல் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பெருந்துறை நகரில் உள்ள 15 அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வின்போது 3 ஓட்டல்களில் கெட்டுப்போன 3½ கிலோ இறைச்சி இருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த ஓட்டல்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பெருந்துறையில் இயங்கி வந்த 3 பேக்கரிகளில் நடத்திய ஆய்வில், காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து அதையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும் 2 மளிகை கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்ததுடன், அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுபோன்ற ஆய்வு பெருந்துறை மட்டுமின்றி விஜயமங்கலம், திங்களூர், காஞ்சிக்கோவில், சீனாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் நடத்தப்படும்,' என்றனர்.


Related Tags :
Next Story