வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை திருட்டு
பொள்ளாச்சி அபுகலாம் ஆசாத் வீதியை சேர்ந்தவர் டெசித்தா மேரி (வயது 70). இவர் தனது மகள் பிலேரோவுடன் ஆழியாறில் உள்ள அறிவுதிருக்கோவிலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.
மேலும் பீரோவில் இருந்த 10¼ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
பொதுமக்கள் பீதி
பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய எல்லையான சேரன் நகரில் 2 வீடுகளிலும், கிழக்கு போலீஸ் நிலைய எல்லையில் கோட்டூர் ரோட்டில் ஒரு வீட்டிலும், நேற்று மேற்கு போலீஸ் நிலைய எல்லை பகுதியிலும் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்குள் இந்த சம்பவங்கள் நடந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். முக்கிய சாலைகளில் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.