3 தலைமுறைகளாக வசிக்கும்100 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு


3 தலைமுறைகளாக வசிக்கும்100 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 27 Jun 2023 1:15 AM IST (Updated: 27 Jun 2023 12:48 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அத்திமரத்து பள்ளம், சக்கில் நத்தம் கிராமங்களில் 3 தலைமுறைகளாக வீடு கட்டி வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

வீட்டுமனை பட்டா

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பாலக்கோடு தாலுகா அத்திமரத்துப்பள்ளம், சக்கில் நத்தம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். 3 தலைமுறைகளாக இந்த கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். வீடுகளுக்கு மனைப்பட்டா கேட்டு ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். தொழிலாளர்களான எங்கள் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

செக்கோடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பொது நிதி திட்டம் மூலமாக செக்கோடி காலனி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தண்ணீர் ஏற்ற வில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி இந்த பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

518 மனுக்கள்

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 518 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் சாந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வுகளை உடனுக்குடன் வழங்க உத்தரவிட்டார். கடந்த வாரம் வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 இருளர் குடும்பங்களுக்கு உடனடி நடவடிக்கை மூலம் வீட்டு மனை பட்டாக்களை இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனி தேவி, நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story