டாஸ்மாக் பாரில் குடித்த மதுவில் சயனைடு கலந்தது எப்படி?


டாஸ்மாக் பாரில் குடித்த மதுவில் சயனைடு கலந்தது எப்படி?
x

டாஸ்மாக் பாரில் குடித்த மதுவில் சயனைடு கலந்தது எப்படி?

தஞ்சாவூர்

தஞ்சையில் 2 பேர் இறந்த விவகாரத்தில் டாஸ்மாக் பாரில் குடித்த மதுவில் சயனைடு கலந்தது எப்படி? என்பது குறித்து 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அடங்கிய 5 தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

டாஸ்மாக் மதுபான கூடம்

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் மார்க்கெட எதிரே அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையின் அருகே மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானபாரில் திருட்டுத்தனமாக மது விற்பனை தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடையில் குவார்ட்டர், ஆப், புல் பாட்டில் மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்த மதுபான பாரில் குவார்ட்டரில் பாதி அளவு கட்டிங் என்ற பெயரிலும் மதுவிற்பனை நடந்து வந்து உள்ளது. குவார்ட்டர் விலையில் பாதி தான் கட்டிங்கிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் ஏராளமானோர் இந்த மதுபாருக்கு வந்து மது குடிப்பது வழக்கம்.

2 பேர் சாவு

இந்த பாரில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி(வயது 68), பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவரான விவேக்(36) ஆகிய இருவரும் மது குடித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மதுவில் சயனைடு

இதற்கிடையில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர்களின் உடலின் சயனைடு கலந்து இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், மது குடித்து இறந்த 2 பேரின் உடல்களின் வயிற்றுப் பகுதி, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு தஞ்சை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் சயனைடு கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

உயிரிழந்த விவேக் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்த 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சயனைடு சாப்பிட்டு இறக்கும் அளவிற்கு இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சயனைடு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். போலீசார் சயனைடு என கூறி இருவரின் மரணத்தையும் திசை திருப்ப பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

5 தனிப்படையினர் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரித்விராஜ் சவுகான்(பட்டுக்கோட்டை), ஜாபர் சித்திக்(திருவிடைமருதூர்), பிரபு(திருவாரூர்), ராஜா(தஞ்சை), ராஜ்குமார்(பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, தஞ்சை) ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படையினர், மதுபான பாருக்கு சயனைடு எப்படி வந்தது? இறந்த 2 பேரும் மதுபான பாருக்கு சயனைடை எடுத்து வந்து மதுவில் கலந்து குடித்தனரா?. அவர்களுக்கு சயனைடு எங்கிருந்து கிடைத்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகியோரின் குடும்ப பின்னணி குறித்தும், டாஸ்மாக்கில் விற்பனையான மது குறித்தும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சயனைடு விவகாரத்தில் மதுபான பாருக்கு சயனைடு எப்படி வந்தது? யார் வாங்கி வந்தது? டாஸ்மாக் மதுவில் சயனைடை எப்படி கலந்தார்கள்? என்பன போன்ற காரணங்களுக்கு விடை கிடைத்தால் தான் இருவரின் சாவில் உள்ள மர்ம முடிச்சுக்கள் அவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Related Tags :
Next Story