தனது பெயரில் 67 சிம்கார்டுகளை வாங்கிய செல்போன் கடைக்காரர் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்


தனது பெயரில் 67 சிம்கார்டுகளை வாங்கிய செல்போன் கடைக்காரர் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2023 8:30 PM GMT (Updated: 3 Jun 2023 7:40 AM GMT)

தனது பெயரில் 67 சிம்கார்டுகளை செல்போன் கடைக்காரர் வாங்கியது எப்படி? என போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மதுரை

தனது பெயரில் 67 சிம்கார்டுகளை செல்போன் கடைக்காரர் வாங்கியது எப்படி? என போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

போலி ஆவணங்கள்

மத்திய அரசு தொலை தொடர்புதுறையின் டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவினர், செல்போன் வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களை செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருள் உதவியுடன் ஆய்வு செய்தனர். இதில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சிம்கார்டுகள் போலியான ஆவணங்கள் பயன்படுத்தி வாங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த சிம்கார்டுகளை முடக்கிய தொலைதொடர்புதுறை, அவற்றை விற்பனை செய்தவர்கள் மீது அந்தந்த மாநில போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

அதன்படி தமிழக சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் உத்தரவுபடியும், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் அறிவுறுத்தல்படியும், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.

67 சிம்கார்டுகள்

இதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வ.கல்லுப்பட்டியை சேர்ந்த அழகுராஜா (வயது 34) என்ற செல்போன் சிம்கார்டு விற்பனையாளர், அவரிடம் சிம்கார்டு வாங்கிய வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆதார்கார்டு நகல்களை எடுத்து அதில் உள்ள புகைப்படங்களுக்கு பதிலாக, அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி 67 சிம்கார்டுகளை சட்ட விரோத பயன்பாட்டிற்கு ஆக்டிவேசன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் போலியான ஆதார்கார்டை தயார் செய்து ஆள்மாறாட்டம் செய்து சம்மந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, உண்மையான ஆவணம் போல் மோசடி செய்வதற்காக ஆன்லைனில் அனுப்பியும் அந்த நிறுவனங்களை நம்ப வைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அழகுராஜாவை மதுரை மாவட்ட சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புகார் அளிக்கலாம்

எனவே பொதுமக்கள் தங்களுடைய ஆவணங்களை வெளியில் கொண்டு செல்லும் போதும் மற்றவர்களிடம் கொடுக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் ஏதேனும் சூழ்நிலையில் ஆன்லைனில் பணம் இழக்க நேரிட்டால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story