நித்யானந்தா குறித்து டிஸ்கவரி+ ஓடிடி தளத்தில் வெளியான ஆவணப்படம்
சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்கவரி பிளஸ் சேனல் நித்தியானந்தா குறித்த ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.
சென்னை
பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளியாக கருதப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்கவரி பிளஸ் சேனல் நித்தியானந்தா குறித்த ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. the daughter joined a cult என்ற பெயரில் வெளியான அந்த ஆவணப்படத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் Bikram: Yogi, Guru, Predator மற்றும் Bad Boy Billionaires: India போன்ற ஆவண இணைய தொடர்கள் வெளியாகி இருந்தன. இந்த தொடர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் குறித்து பேசி இருந்தன. இந்நிலையில், இப்போது நாட்டை விட்டு வெளியேறி ரகசியமாக வாழ்ந்து வரும் நித்யானந்தா குறித்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. மூன்று அத்தியாயங்களாக இந்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. இதில் நித்யானந்தா குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு செய்தி நிறுவனங்களின் நியூஸ் ஃபுட்டேஜ், நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள், பத்திரிகையாளர்கள், நித்யானந்தாவின் பிரசங்க வீடியோ காட்சிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நித்தியுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் இதில் பேசி உள்ளனர். அவரது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்தில் நடந்த பெண் சீடர் மர்ம மரணம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்கள், ஆபாச வீடியோ என நித்யானந்தாவின் எழுச்சி தொடங்கி வீழ்ச்சி வரையில் இதில் பேசப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அத்தியாயமும் சராசரியாக 40 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த ஆவணப்படம் ஸ்ட்ரீமாகி வருகிறது.
உலக அளவில் நித்யானந்தாவைப் பற்றி தெரிந்தவர்கள் மத்தியில் இந்த ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை கைலாசா மறுத்துள்ளது. இதுகுறித்து கைலாசா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்து மதத்திற்கு எதிராக டிஸ்கவரி பிளஸ் நிறுவனம் குருமார்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு உள்ளதாகவும் பக்தர்கள் அதனை நம்ப வேண்டாம் என கூறியுள்ளது.
இதுபற்றி வெளியிட்டப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் செய்தியில்,"டிஸ்கவரி சேனலும் ஹிந்துமத குருமார்கள் வெறுப்பு பிரச்சாரமும் பின்னணி என்ன ? உண்மையை உடைக்கும் பக்தர்கள். உங்களது கருத்துக்களை இந்த முகநூல் பதிவில் கமெண்ட்களில் பதிவிடவும் Post Link :https://www.facebook.com/TheAvatarClicksTamil/posts/1097494897518002, மேலே கொடுக்கப்பட்டுள்ள link ஆனது வேலை செய்யவில்லை என்றால் இந்த 8072250413 எண்ணை உங்களது அலைபேசியில் பதிவு செய்துவிட்டு மீண்டும் லிங்க்கை கிளிக் செய்து திறக்க முயற்சியுங்கள் லிங்க் ஆனது வேலை செய்யும்." என கூறப்பட்டுள்ளது.