மத்திய அரசு பட்ஜெட் எப்படி?-பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? உள்ளது என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு
நிதி ஆலோசகர் வ.நாகப்பன்:- மத்திய அரசின் 2023-24 பட்ஜெட்டில் விவசாயிகள், கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களையும் கவனத்தில் கொண்டு தனி நபர் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி உள்ளது வரவேற்புக்குரியது. கிராமப்புறங்களில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே விவசாயம் மற்றும் சுயத்தொழில் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். இன்றைய நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தி நல்ல லாபம் பெற ஏதுவாக இருக்கும். குழந்தைகளுக்கான 'டிஜிட்டல்' நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்புக்குரியது. மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு முதலீடுகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உண்டாகும்.
இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் முயற்சியாக இந்த 'பட்ஜெட்'டை மத்திய அரசு தயாரித்து உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செலவுகளை குறைக்கும் அறிவிப்பு இல்லை
ஆடிட்டர் செல்வ கணேஷ்:- மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது நல்ல பட்ஜெட்டாக தான் இருக்கிறது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) உயர்ந்து கொண்டே போவது நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு நல்லது அல்ல. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி ஒரே மாதிரியாக இருப்பதால் அது நியாயமான வரி முறையாக இல்லை. அதேபோல் பட்ஜெட்டில் வரவை மட்டும் தான் மத்திய அரசு பார்க்கிறது. வருவாய்க்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போல் செலவுகளை குறைப்பதற்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும். நிர்வாக செலவுகளை குறைக்கும் திட்டத்தையும் அறிவித்து இருக்கலாம். கொரோனா காலத்தில் உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய செலவுகளை குறைத்தன. அதேபோல் அரசும் தங்களுடைய நிர்வாக செலவுகளான வாடகை, வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றையும் குறைத்திருக்கலாம். ஒற்றை பதிவு முறையை நிர்வகிக்கும் அரசு இரட்டை பதிவு முறையை கொண்டு வந்தால் நிதி நிர்வாக திறமை மேலும் மேம்படும்.
வியப்பை தரும் 'பட்ஜெட்'
பொருளாதார பேராசிரியர் வெங்கடசாமி:- 'அனைத்து தரப்பினருக்கும், அனைத்தும்' என்ற நோக்கில் உலகமே வியக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை ஒளிர செய்யும் 'பட்ஜெட்' இது. கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் வேளாண் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கான கடன் தொகை அதிகரிப்பு, வர்த்தக புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம், ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை என நல்ல பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவு தரவுதளம் தொடங்கப்பட்டு, அதில் மீன்பிடி தொழிலாளர்கள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல அறிவிப்பாகும். 'ஒருங்கிணைந்த வசதி, கடைசிவரை வசதி, நிதித்துறை கட்டமைப்பு வசதி' என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 'பட்ஜெட்' நிச்சயம் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற செய்யும் பட்ஜெட் ஆகும். அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றத்தை தரும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது. அந்தவகையில் இது கவர்ச்சிகரமான, அதேவேளை வியப்பை தரும் பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது.
சமூக கட்டமைப்பை மேம்படுத்தும்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம்:- 2024-ம் ஆண்டு தேர்தலை அடிப்படையாக கொண்டு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. நடுத்தர மக்களுக்கு வருமான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு, ஏழைகளுக்கான பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்வு, நகர்ப்புற கட்டமைப்புக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி, 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி என்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கது. பொதுவாக, இந்த பட்ஜெட் சமூக கட்டமைப்பை மேம்படுத்துகிற ஒன்றாக உள்ளது. இந்த பலத்தால் தான் இந்தியா பொருளாதார சிக்கல்களை இதுவரை சிறப்பாக சமாளித்து வந்துள்ளது. ஜி20 மாநாட்டின் குறிக்கோள்களான சுகாதாரம், மரபுசாரா எரிசக்தி உபயோகத்தை அதிகரித்தல், இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த பட்ஜெட் ஊக்கப்படுத்தி உள்ளது. 5ஜி-யை வேலை வாய்ப்புக்கும், விவசாயத்துக்கும், விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்தவும் பயன்படுத்த முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அடிப்படை கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பை அதிகபட்ச அளவில், தமிழ்நாடு அரசு தனதாக்கிக்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுத்து, தனிமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் தங்க.தர்மராஜன்:- பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது இந்்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு இருமடங்கு அதிக லாபம் தரக்கூடிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். ஆனால் அது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும். அனைத்து வகையான விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று போராடினோம். இது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையாகும். மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயர்த்த எந்த ஒரு நல்ல திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. எனவே விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட்டாகவே உள்ளது.
வேடிக்கையாக உள்ளது
உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரம்மா:- நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரிகளில் '5ஜி' சேவையை பயன்படுத்தி செயலிகளை உருவாக்குவதற்கான 100 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் படித்து விட்டு வெளியே வரும்போது அவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு வழங்குவது அல்லது அவர்கள் தொழில் தொடங்க முக்கியத்துவம் அளிப்பது போன்றவை பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இந்த பட்ஜெட் படித்து கொண்டு இருக்கும் எங்களை போன்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றம் தான் அளிக்கும்.
தங்கம், வெள்ளியை வாங்க முடியாது
தா.பழூரை சேர்ந்த குடும்பத்தலைவி கயல்விழி:- செல்போன், டி.வி. போன்றவற்றின் உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகளவு முதலீடு செய்ய விரும்பும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களின் மீதான விலை உயர்வு நிச்சயமாக ஏற்கத்தக்கது அல்ல. மின்சாதன பொருட்களின் மீதான விலை குறைப்பு பொதுமக்களை இன்னும் சோம்பேறியாக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் இனி ஏழை, எளிய மக்களால் தங்கம், வெள்ளி போன்றவை வாங்க முடியாது. இது உழைப்பவர்களை வஞ்சிக்கும் கொடுமையான பட்ஜெட்.
கொள்முதல் விலை
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (சிஃபா) மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன்:- மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் விவசாய பொருட்களுக்கான கொள்முதல் விலையில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. விளை பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய வசதியை ஏற்படுத்துவதற்கான எந்த திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகளவில் விளைவிக்கப்படும் கரும்பு, நெல், சோளம், கடலை உள்ளிட்ட தானியங்களை பற்றி பட்ஜெட்டில் எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளோம்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.