மத்திய அரசு பட்ஜெட் எப்படி?பொதுமக்கள் கருத்து


மத்திய அரசு பட்ஜெட் எப்படி?பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:15:36+05:30)

மத்திய அரசு பட்ஜெட் எப்படி? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தென்காசி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சிறந்த நடவடிக்கை

நெல்லை மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குணசிங் செல்லத்துரை:-

அதிக பணப்புழக்கத்தை உறுதி செய்யும் என்பதால், 'புதிய வரி விதிப்பு' உயர்தர விலக்குடன் உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. அரசு அல்லாத அதிகாரிகளுக்கான வரி விலக்கு திட்டமும் அழகு சேர்க்கிறது. மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்ட வரம்பு ரூ.30 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டது நல்லது. ரெயில்வே மற்றும் பாதுகாப்புக்கான வரவு செலவு திட்டத்தில் ஒரு பெரிய சதவீத அதிகரிப்பு வரவேற்கத்தக்கது.

அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரே அடையாளமாக ஆதார் மற்றும் பான் ஆகியவற்றை பயன்படுத்துவது ஒரு சிறந்த நடவடிக்கையாகும். குழந்தைகளுக்கான டிஜிட்டல் நூலகம் அமைப்பது காலத்தின் தேவையாகும்.

அரசு ஊழியருக்கு ஏமாற்றம்

நெல்லை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய துணைத்தலைவர் அருணாசலம்:-

ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே வரவேற்பை ெபறும்.

அதே நேரத்தில் வருமான வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் வரை சேமிப்பு கணக்கு காட்டலாம் என்பதை ரூ.3 லட்சமாக உயர்த்தி இருக்கலாம். நாடு முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ள 157 மருத்துவ கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடாதது அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

வரவேற்கத்தக்கது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வராஜ்:-

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க கூடுதல் கடன் வசதி வழங்கப்படும், இந்த கடனுக்கான வட்டி ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செல்போன், டி.வி. உதிரிபாகங்களுக்கு வரி குறைத்திருப்பது நல்லது. ஆனால் ஆன்லைன் பணபரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்தி இருப்பது சிறு, குறு, நடுத்தர வணிகர்களை அதிகம் பாதிக்கும். தங்கம் விலை உயர்வும் மக்களை அதிகம் பாதிக்கும்.

பரிசீலனை செய்ய வேண்டும்

நெல்லை டவுனை சேர்ந்த இல்லதரசி பிரியங்கா:-

பெண்களுக்கான சேமிப்பு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று புதிய சேமிப்பு திட்டம் அறிவித்திருப்பது பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதுபோல் ஓய்வு காலத்தில் முதலீடு செய்து நிரந்தர வருவாய் பெற மூத்த குடிமக்கள் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்று இருந்த வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

ஏழை-எளிய மக்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் அதிக விலை கொடுத்து தங்கம் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த தங்கத்திற்கு வரி அதிகரித்திருப்பது ஏழைகளை அதிகம் பாதிக்கும். இதை பரிசீலனை செய்ய வேண்டும்.

சிறப்பான பட்ஜெட்

தென்காசியை சேர்ந்த ஆடிட்டர் ஆர்.சித்திரம்:-

வருமான வரி உச்சவரம்பின்படி ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்பது பெரிய மாற்றம் ஆகும். இதனால் மாத சம்பளதாரர்கள், நடுத்தர மக்கள் அனைவருக்கும் வருமான வரி சலுகை கிடைக்கும்.

ெரயில்வே துறை மற்றும் பசுமை விவசாயம், சிறுதானிய உற்பத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முன்னேற்ற பாதையை நோக்கி செல்கிறது, என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் சிறப்பான பட்ஜெட்.

இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.Next Story