குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எவ்வளவு? - புதிய பட்டியலை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.
ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது
சென்னை,
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வெளியானது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு 3 ஆண்டு இடைவெளியில் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாலும், போட்டியாளர்கள் இந்த தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு இருப்பதாலும் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்வர்கள் மத்தியிலும், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வந்தன.
இதையடுத்து அறிவிப்பு வெளியான போது 7,301 காலி இடங்கள் என்று இருந்ததை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, சமீபத்தில் 10 ஆயிரத்து 178 இடங்களாக அதிகரித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி வரையிலான நிலவரப்படி, மேலும் குரூப்-4 பதவிகளில் காலியிடங்களை அதிகரித்து புதிய பட்டியலை நேற்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
அதில், 5 ஆயிரத்து 321 இளநிலை உதவியாளர், 3 ஆயிரத்து 377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 292 காலி இடங்கள் குரூப்-4 பதவிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.