பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் எவ்வளவு?


பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் எவ்வளவு?
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

காலநிலை மாற்றங்கள்

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்திற்கு கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய திட்ட செயலாக்க ஆணை பெறப்பட்டு உள்ளது.

அதன்படி வாழை, கத்தரி, வெங்காயம், தக்காளி, மரவள்ளி மற்றும் கொத்தமல்லி ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் வங்கி கடன்பெறும் விவசாயிகள் மேற்கண்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவர்கள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.

காப்பீட்டு கட்டணம்

இத்திட்டத்தில் ஒரு ஹெக்டேர் வாழைக்கு ரூ.12 ஆயிரத்து 36, மரவள்ளிக்கு ரூ.4 ஆயிரத்து 230, கத்தரிக்கு ரூ.2ஆயிரத்து 878, வெங்காயத்திற்கு ரூ.5 ஆயிரத்து 477 தக்காளிக்கு ரூ.3 ஆயிரத்து 674 மற்றும் கொத்தமல்லிக்க ரூ.1,531 பயிர் காப்பீட்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகள் ரபி 2022-23-ம் நிதி ஆண்டு பருவத்தில் கொத்த மல்லிக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 18.01.2023. வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிக்கு கடைசிநாள் 31.12.2022, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு கடைசி நாள் 28.02.2023 ஆகும்.

எனவே விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story