பார்த்தீனியம் செடியை கட்டுப்படுத்துவது எப்படி?
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் செடியை கட்டுப்படுத்துவது எப்படி? என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்தார்.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் செடியை கட்டுப்படுத்துவது எப்படி? என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பார்த்தீனியம் பரவும் முறை
பார்த்தீனீயம் என்ற களைச்செடி 1950-களில் கோதுமை தானியங்கள் மூலம் இந்திய நாட்டிற்குள் நுழைந்தது. 1956-ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனே நகரில் முதன் முதலாக காணப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விவசாயம், விவசாயம் அல்லாத நிலங்கள் அனைத்திலும் பரவலாக காணப்படுகிறது.
பொதுவாக இச்செடி விதை மூலம் பரவும். ஒரு செடி, தன் வாழ்நாளில் 15000 முதல் 25000 விதைகள் உற்பத்தி செய்யக்கூடியவை. இந்த விதைகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஆகையால் காற்றில் எளிதில் பரவக்கூடியது. மேலும், மழை மற்றும் பாசன நீர், மனித செயல்பாடுகள் மூலமும் பரவகூடும்.
அறுபட்ட செடிகளில், மீதமுள்ள தண்டு மற்றும் வேர் பகுதிகளிலிருந்து மீண்டும் வளரக்கூடிய தன்மை உடையது. அலிலோபதி தன்மை அதாவது ரசாயன வெளியீட்டால் பிற செடிகளை வளர விடாமல் செய்வதால் போட்டியின்றி விரைவாகவும் பரவலாகவும் வளரக்கூடியவை.
மகசூல் பாதிப்பு
பொதுஇடங்கள், விளை நிலங்கள் என்று பரவலாக காணப்படும் இச்செடி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இச்செடியினால் பலருக்கு தோல் மற்றும் சுவாசகுழாய் நோய்கள் ஏற்படும். மேலும் பொதுஇடங்களில் இச்செடி பரவுவதால் பாதை மறைப்பு, அழகியியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். விளை நிலங்களில் இச்செடி பரவுவதால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனியத்தினை ஆட்களைக்கொண்டு கையுறை அணிந்து கைக்களையாக அகற்றி விடவேண்டும். ஆட்களைக்கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகளை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய்வேளை. சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இந்த செடியின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுத்து விடுகிறது.
களைக்கொல்லிகளை பயன்படுத்தி
மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே மெக்சிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். ஆகையால் மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.
அதிகமாகவும், மீண்டும் மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாக கட்டுப்படுத்த அட்ரசின், 2,4-டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரி பூசன் போன்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.