பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x

பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவு பூச்சி தாக்குதல்

தற்போது, நிலவிவரும் வறண்ட வானிலை, அதிக அளவு வளிமண்டல வெப்பத்தின் காரணமாக பருத்தி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. மாவுப்பூச்சி இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பப்பாளி மாவுப்பூச்சி, பருத்தி மாவுப்பூச்சி, இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி, வால் மாவுப்பூச்சி போன்றவை மிக முக்கியமானவையாகும். மாவுப்பூச்சியை சுற்றியுள்ள வெள்ளை நிற மெழுகு படலம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், நன்மை செய்யும் பூச்சிகளிடமிருந்து அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. பஞ்சுபோல் அடர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சி கூட்டங்கள் இலைகள் இளம் தண்டுகளில் பரவிக் காணப்படும்.

களைச்செடிகள் அழிப்பு

இலை மற்றும் தண்டின் சாறு உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மடங்கி மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்துவிடும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேனை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல் ஊர்ந்து செல்வதை காணலாம். மேலும் கேப்னோடியம் என்ற பூஞ்சாணம் இலையின் மேற்பரப்பில் படர்வதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும்.ஒரு ஏக்கருக்கு 40 செடிகளுக்கு மேல் இரண்டாம் நிலை தாக்குதல் அதாவது ஒரு செடியில் ஒரு கிளையானது முழுவதுமாக மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டுப்பாட்டு முறைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். மேலும், வயலில் காணப்படும் களைச்செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.பப்பாளி மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசி ரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிடவேண்டும்.பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இதை பயன்படுத்தியும் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story