பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?


பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
x

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

பெரம்பலூர்

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

உளவியல் பாடத்தை கற்று கொடுக்கலாம்

மண்மங்கலம் பகுதியை சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் ஜெபசிங் பெட்போர்டு:-

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் மாணவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்து உளவியல் சம்பந்தமான பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுவயது முதல் மாணவர்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்களோ? எவ்வாறு கற்றுக் கொடுக்கப்படுகிறார்களோ? மாணவர்களை எவ்வாறு நடத்துகிறார்களோ? அதை பொறுத்து பாலியல் குற்றங்கள் குறையும். ஒவ்வொரு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஒரு தனி உளவியல் ஆசிரியர் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு உளவியல் சார்ந்த பாடங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அதே போல் பெற்றோர்களும் கண்டிப்புடன் வீட்டில் வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டியது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாகும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியை வளர்மதி:-

ஆண்கள், பெண்களை எப்போதும் தன் உடன் பிறவா சகோதரியாகவும், தாயாகவும் பார்க்க வேண்டும், அப்போது தான் பாலியல் எண்ணங்கள் தோன்றாது. பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுப்பது குறித்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் பாலியல் தொந்தரவுகளை தடுக்க முடியும். பெற்றோரும் தங்கள் ஆண், பெண் குழந்தைகளை கட்டுப்பாடுவுடன், ஒழுக்கமுடன் வளர்த்தால் எதிர் காலத்தில் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து நல்ல பெயர்கள் பெற்று தருவார்கள்.

நடவடிக்கை எடுப்பதில்லை

உப்பிடமங்கலம் அருகே உள்ள கும்மாயம்பட்டியை சேர்ந்த பெரியசாமி:-

இன்றைய நிலையில் பள்ளி-கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் நடப்பது வேதனை தருவதாக உள்ளது. பெற்றோரை விட உயர்ந்த நிலையில் வைத்து குருவாக விளங்கும் ஆசிரியர்களை மாணவ, மாணவிகள் மதிக்கின்றனர். அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்கள் தன் நிலை மறக்கும் போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமலும் விட்டு விடுகின்றனர்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் நட்பு ரீதியாக பழகி அவர்களிடம் எந்தவிதமான பிரச்சினை என்றாலும் தங்களிடம் கூற வேண்டும் என அறிவுறுத்தினால் பெண் குழந்தைகள் தைரியமாக பெற்றோரிடம் பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து தெரிவிப்பார்கள். மேலும் கல்வி நிலையங்களில் நிர்வாகத்தினர் அடிக்கடி ஆசிரியர்களை ஒன்று கூட்டி பிற பகுதிகளில் நடக்கும் இது போன்ற குற்றங்கள் நமது பள்ளியில், கல்லூரியில் நடக்காமல் இருக்க ஒவ்வொருவரும் மாணவ-மாணவிகளிடம் தாய், தந்தை ஸ்தானத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து தெளிவாக எடுத்து கூற வேண்டும். மாணவ-மாணவிகளுக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பல்வேறு தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது போன்ற குற்றங்களை தடுப்பதில் பெற்றோர்-ஆசிரியர் மட்டுமல்லாது சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது.

ஆடை கட்டுப்பாடு அவசியம்

தோகைமலை அருகே உள்ள மாகாளிபட்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் குணசேகரன்:-

தற்போது மாணவ-மாணவிகளிடம் செல்போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதன் பயன்பாட்டை கட்டுபடுத்தினாலே பாலியல் குற்றங்களை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் அனைவருக்கும் ஆடை கட்டுப்பாடு என்பது அவசியம். கல்லூரி மாணவ-மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ெசல்போன் பயன்பாடு முக்கிய காரணம்

கரூரை சேர்ந்த கல்வியாளர் ஸ்டீபன் ராஜா:-

நமது சமூகத்தில் தற்போது அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மன தத்துவ நிபுணர்கள், போலீசாரை கொண்டும் கருத்தரங்களை நடத்திட வேண்டும். அதன்மூலம் பாலியல் குற்றங்களால் ஏற்படும் சமுதாய தாக்கங்கள், அதற்கான காரணங்கள், குற்றங்களினால் சட்டங்களில் உள்ள தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் இருபாலரையும் சமமாக பாவித்து ஒரு குடும்பத்து பிள்ளைகளாக உணர்வினை ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்த வேண்டும். தற்போது பள்ளி மாணவர்களின் கைகளில் செல்போன் முக்கிய பொருளாக உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு செல்போன் முக்கிய பொருளாக அமைந்துள்ளது.

மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள செல்போனை படிப்பிற்கு பயன்படுத்தி முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்-. இருபாலர் பயிலக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தங்களிடையே உள்ள வேறுபாட்டை கலைந்து அனைவரும் சமம். அனைவரும் ஒரு குடும்பத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்துவதனால், மாணவர்கள் அவர்களின் தனித்திறனில் கவனம் செலுத்தி தொடங்குவார்கள். மேலும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாலியல் விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்த வேண்டும்.

செல்போன் பயன்பாட்டை குறைக்கவும்

கரூரை சேர்ந்த உளவியல் நிபுணரும், டாக்டருமான சுப்பிரமணியன்:-

இன்றைய இளம் சமுதாயத்தில் பாலியல் பிரச்சினைகளில் சிக்குவது மாணவ, மாணவிகள் தான். இதனை தடுக்க பள்ளிகளில் இருந்தே பாலியல் சம்பந்தமான கல்வி, வழிகாட்டுதலை ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக வளரிளம் பருவத்தில் உடல் ரீதியாக, மன ரீதியாக மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனை மாணவ, மாணவர்கள் சந்திக்கிறார்கள். அதனை நாம் ஒழுங்குப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஒழுங்கீனத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். இருபாலர் கல்வியை குழந்தையில் இருந்து மாணவர்களுக்கு கொண்டு வந்தால், அந்த குழந்தைகள் வளர, வளர நண்பர்களாகவும், சகோதர, சகோதரிகளாகவும் பழகுவார்கள். அப்படி வளரும் போது அவர்களுக்கு வளரிளம் பருவத்தில் கூட நண்பர்கள் என்ற உறவுகள்தான் முக்கியமாக தெரியும். இந்த பாலியல் உணர்வுகளோ, குற்றங்களோ செய்வதற்கு வாய்ப்பு இருக்காது.

இந்த சூழ்நிலையை கல்வியில் நாம் கொண்டு வந்தால் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியம் சம்பந்தமான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்காது. ஆசிரியர்களின் கவனிப்பும், கண்டிப்பும் இளம் வயது மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படுகிறது. செல்போன்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவர்கள் பயன்படுத்தவதை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அதில் அதிகமாக இளம் வயது பிள்ளைகள் தங்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டு வருகின்றனர். அவர்கள் செல்போன் பயன்படுத்துவதை நாம் கவனித்து அதனை தடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துவதை கவனிக்க வேண்டும். பிள்ளைகளும் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story