வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?


வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். நீலகிரியில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 200 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பெய்கிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 124 சதவீதம் அதிகமாக பெய்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது.

வடகிழக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழையைபோல் கூடுதலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குன்னூர், கோத்தகிரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் உத்தரவின் பேரில், வடகிழக்கு பருவமழையையொட்டி ஒத்திகை பயிற்சி ஊட்டி படகு இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

முதலுதவி சிகிச்சை

ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பருவமழை காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர். அதன் விவரம் வருமாறு:- ஊட்டி ஏரியில் 2 பேர் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தனர். உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மிதக்கும் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உயிர் பாதுகாப்பு கவச உடைகள், வளையங்கள் மூலம் 2 பேரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்த ஒத்திகையை அங்கு வந்த சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டனர். மேலும் மின் விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், மின் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து விளக்கினர். இதேபோல் குன்னூரில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.


Next Story