பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?


பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
x
தினத்தந்தி 3 Sep 2023 9:15 PM GMT (Updated: 3 Sep 2023 9:15 PM GMT)

ஊட்டி காமராஜ் சாகர் அணையில் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி காமராஜ் சாகர் அணையில் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்தனர்.

வடகிழக்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும்.

இதன்படி தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர் மற்றும் வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடைமழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு புயல், வெள்ளம், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் ஏற்படும் சமயங்களில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்க தீயணைப்புத் துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

ஒத்திகை

இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காமராஜ் சாகர் அணையில் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது அணையில் ஒருவர் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். அவரை உயிர் பாதுகாப்பு கவச உடை அணிந்த தீயணைப்பு வீரர் நீந்தி சென்று மீட்டார். தொடர்ந்து மீட்பு படகில் சென்று அந்த நபரை பத்திரமாக மீட்டது குறித்து தத்ரூபமாக ஒத்திகை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் பேரிடரில் சிக்கிக்கொண்டால் தங்களையும் காத்து, மற்றவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது, பேரிடர் மீட்பு படை வருவது வரை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து எடுத்து கூறினர்.


Next Story