தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி?கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம்


தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி?கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம்
x

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வடகிழக்கு பருவ மழை

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும்.

கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல் வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

பழப் பயிர்கள்

பல்லாண்டு பழப் பயிர்களான மா, கொய்யா, மாதுளை ஆகியவற்றில் கவாத்து செய்து நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும். பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்ல மிளகு, ஜாதிக்காய், கிராம்பு முதலியவற்றுக்கு உரிய வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க டிரைகோடெர்மாவிரிடி நிலத்தில் தெளிக்க வேண்டும். கிராம்பு மற்றும் ஜாதிக்காய் பயிர்களில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். ரப்பர் பயிரில் மரத்தின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து உள்நோக்கு சாய்வு அமைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர் பால் வடிக்கும் பகுதியில் பாதுகாப்பு பூச்சு பூச வேண்டும்.

வாழை

வாழையை பொறுத்த வரையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு, யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரத்தை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேலும் 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.

மரவள்ளி, பந்தல் காய்கறிகள் மற்றும் பூ பயிர்களுக்கு உரிய வடிகால் வசதி செய்து தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story