சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனைத்துக்கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முதல் நான்குமுனை சந்திப்பு வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கண்டன கோஷம்
இப்போராட்டத்தை விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார், நகர தலைவர் செல்வராஜ், நகரமன்ற கவுன்சிலர்கள் இம்ரான்கான், சுரேஷ்ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சண்முகம், ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, தொகுதி செயலாளர் பெரியார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், ம.தி.மு.க. நிர்வாகி நரசிம்மன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கண்டமங்கலம், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை, கோட்டக்குப்பம், கிளியனூர், வல்லம், மரக்காணம், வளத்தி, கூட்டேரிப்பட்டு, கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் ஆகிய இடங்களிலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.