கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்


கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:15:10+05:30)

கோவில்பட்டி நகராட்சியில் கூடுதலாக ஒரு தினசரி சந்தை அமைக்க கோரி இன்று(செவ்வாய்க்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சியில் கூடுதலாக ஒரு தினசரி சந்தை அமைக்க கோரி இன்று(செவ்வாய்க்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் கடையடைப்பு போராட்டம் நடத்தியது. இந்நிலையில், தற்போது செயல்படும் சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக்கூடாது. நகராட்சி எல்லைக்குள் கூடுதலாக ஒரு சந்தை உருவாக்க வலியுறுத்தி கடந்த 11-ந்தேதி பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், 11-ந்தேதி அக்கட்சியினர் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது உதவி கலெக்டர் இல்லாததால், நேற்று உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.இதன்படி, நேற்று காலை 11 மணிக்கு உதவி கலெக்டர் கா.மகாலட்சுமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், தற்போதுள்ள தினசரி சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக்கூடாது என்பது தான் 80 சதவீத மக்களின் கருத்தாகும். எங்களது பிரதான கோரிக்கை நகரில் மேலும் ஒரு தினசரி சந்தையை உருவாக்க வேண்டும் என்பது தான். இதனை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் நியாயமான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். எங்களது போராட்டத்துக்கு போலீசார் தொடர்ச்சியாக அனுமதி மறுத்து வருகின்றனர், என்றனர்.

மனித சங்கிலி போராட்டம்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் தெரிவித்தார். இதை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கூறுகையில், போலீசார் அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் கோவில்பட்டியில் கூடுதலாக தினசரி சந்தை அமைக்க வலியுறுத்தி நாளை (இன்று) மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும், என்று உதவி கலெக்டரிடம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story