சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட அனைத்து மதசார்பற்ற முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று நடந்தது. பா.ஜ.க.வின் வர்ணாசிரம கொள்கை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சனாதன கொள்கையை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து வெங்கடேசபுரம் வரை நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார்.
இதில் ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜெயசீலன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, இந்திய தொழிலாளர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழ்வழிகல்வி இயக்கம் ஆகியவற்றின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேப்பந்தட்டையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், இடிமுழக்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். குன்னம் அருகே வேப்பூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.