திருத்தணி அருகே பள்ளியில் பூட்டுக்கு மனித கழிவு பூசிய கொடூரம்.! மாணவர்கள் போராட்டம்
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர், வகுப்பறை கட்டிடத்தில் மனித கழிவுகளை பூசியுள்ளனர். இதில் பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடத்தில் உள்ள பூட்டுகளில் மனிதக் கழிவுகள் பூசப்பட்டு இருந்தது. மேலும், பள்ளியின் குடிநீர் தொட்டியையும் அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், இந்த சம்பவத்தை கண்டித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், மாணவர்களின் பெற்றோர் அனைவரும் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மர்மநபர்கள் பள்ளியில் தொடர் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் மாணவர்களின் பெற்றோர், அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.