காலிக்குடங்களுடன் கிராம மக்கள் உண்ணாவிரதம்
இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதம்
இளையான்குடி அருகே உள்ள விசவனூர் கிராம ஊராட்சியில் திருகள்ளி கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கிராம தலைவர் ஜோசப் செயலாளர் பிரான்சிஸ் சேவியர், பொருளாளர் அல்போன்ஸ், தலைமை சூரி பீட்டர், பாக்கியம், பாலகுருசாமி, சார்லஸ், கோவிந்தராஜ், குருசாமி, சேதுராமன், காலனி தலைவர் வேலுஅழகுமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் விசவனூர் கிராம பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்றங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், திருகள்ளி கிராமத்திற்கு குடிநீர் முற்றிலும் வழங்கவில்லை.
பேச்சுவார்த்தை
மேலும் சாலை வசதி இல்லாததால் அரசு பஸ் கிராமத்திற்கு வர முடியவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றனர். இதுகுறித்து தகவலறிந்த இளையான்குடி வட்டார வளர்ச்சி ஆணையாளர் முத்துக்குமரன், காவிரி கூட்டு குடிநீர் உதவி பொறியாளர் தினேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, கிராம தலைவர் ஜோசப், சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சேதமடைந்த குடிநீர் குழாய்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழுமையாக செய்து தரவும், இடைப்பட்ட நாட்களில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.