பக்கத்து மாவட்டங்களில் கலெக்டர்களான கணவன்-மனைவி


பக்கத்து மாவட்டங்களில் கலெக்டர்களான கணவன்-மனைவி
x
தினத்தந்தி 17 May 2023 6:45 PM GMT (Updated: 17 May 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 16 கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் நியமனம்தான். ஏனெனில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு கணவன், மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விஷ்ணு சந்திரன், சிவகங்கை மாவட்டத்திற்கு அவரது மனைவி ஆஷா அஜித் ஆகியோர் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் கலெக்டராக நகராட்சி நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக சென்னையில் வழிகாட்டுதல் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த விஷ்ணு சந்திரனின் மனைவி ஆஷா அஜித் நியமிக்கப்பட்டனர்.

விஷ்ணு சந்திரன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய ஆட்சி பணியில் சேருவதற்கு முன்னர் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றி உள்ளார். மதுரையில் உதவி கலெக்டராகவும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். நாகர்கோவிலில் துணை கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆஷா அஜித் கடந்த 2015-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் துணை கலெக்டராக பணிபுரிந்துள்ளார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுசந்திரன் மற்றும் ஆஷா அஜித் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் இருவருரையும் பக்கத்தது மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story