தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குன்னத்தூரை சேர்ந்தவர் பாவாடை மகள் சந்திரலேகா (வயது 22). இவருக்கும் விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கீழக்காலனியை சேர்ந்த அரசன் மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து சந்திரலேகா கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சந்திரலேகா 8 மாத கர்ப்பமாக இருந்தபோது 2-7-2021 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராமச்சந்திரன், சந்திரலேகாவின் தாய் மலர்விழிக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலர்விழி, ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் ஆலடி போலீசார் விசாரணை நடத்தியதில் ராமச்சந்திரன் தனது மனைவி சந்திரலேகாவை கொடுமைப்படுத்தி வந்தார் என்பதும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராமச்சந்திரன் மீது ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.