சின்னசேலம் அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொன்ற கணவர்: சேர்ந்து வாழ வரமறுத்ததால் ஆத்திரம்
கடந்த 1½ ஆண்டு காலமாக, தனது தந்தை அருணாசலம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மகன் தெரிவித்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே தன்னுடன் சேர்ந்து வாழ வரமறுத்த பெண்ணை கல்லால் தாக்கி கணவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). விவசாயி, இவரது மனைவி ரத்தினம் (65). இவர்களது ஒரே மகன் சுப்பிரமணியன் (42). திருமணம் ஆனவர்.
அருணாசலம் தனது பெயரில் இருந்த சொத்துகளை மகன் சுப்பிரமணியனுக்கு எழுதி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மகனிடம் சொத்துக்களை எழுதி கொடுத்ததால், அருணாசலம், ராசிபுரத்தில் உள்ள தனது மாமனார் ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதுபற்றி மனைவி ரத்தினத்திடம் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் அருணாசலம் மட்டும் ராசிபுரம் சென்றுள்ளார். தனது மனைவியை தன்னுடன் அழைத்து செல்லலாம் என நினைத்த அருணாசலம் நேற்று காலை கல்லாநத்தம் வந்துள்ளார்.
கல்லால் தாக்கி கொலை
அப்போது வழக்கம்போல் ரத்தினம், ஆடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற அருணாசலம், தன்னுடன் வந்துவிடுமாறு கூறியும், மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் கோபத்தில் இருந்த அருணாசலம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அங்கு கிடந்த கல்லால் ரத்தினத்தின் தலையில் பின்பக்கம் ஓங்கி தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
இதன்பின்னர் அருணாசலம் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.ரத்தினத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனநலம் பாதிப்பு
இது தொடர்பாக சுப்பிரமணியன் போலீசில் அளித்த புகாரில், கடந்த 1½ ஆண்டு காலமாக, தனது தந்தை அருணாசலம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 20 நாட்களாக எனது தந்தை, தாய் இருவரும் தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர். நான் நேற்று எனது மனைவியுடன் பைத்தந்துறை கிராமத்துக்கு சென்று விட்டேன். இந்த நிலையில் எனது தந்தை எனது தாயுடன் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார். அதில் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.