தலைவாசல் அருகே இரவில் பயங்கரம்: கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக்கொலை-நிதி நிறுவன உரிமையாளர் வெறிச்செயல்
தலைவாசல் அருகே கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தலைவாசல்:
வெட்டிக்கொலை
தலைவாசல் அருகே வீரகனூர் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). நிதி நிறுவன உரிமையாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் என்பவருக்கும் நேற்று இரவு 9.30 மணி அளவில் வீரகனூர் பஸ் நிலையம் பின்புறம் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். செல்வராஜ் அங்கிருந்து தப்பி சென்றார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து செல்வத்தை மீட்டு தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுதொடர்பாக போலீசார் உடனடியாக விசாரணையை முடுக்கி விட்டனர். பின்னர் செல்வத்தை வெட்டிக் கொலை செய்ததாக செல்வராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்வராஜிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
செல்வராஜ், நிதி நிறுவனம் நடத்தி வந்ததோடு பேன்சி கடையும் வைத்து இருந்தார். அந்த பேன்சி கடையில் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் மனைவி சத்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தார்.
ரகசிய உறவு
அப்போது செல்வராஜூக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது ரகசிய உறவு செல்வத்துக்கு தெரிய வந்தது. உடனே அவர் மனைவியை பேன்சி கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதித்தார். அதன்பிறகும் செல்வாஜூக்கும், சத்யாவுக்குமான கள்ளத்தொடர்பு தொடர்ந்துள்ளது.
இதனால் செல்வம், தன்னுடைய மனைவிைய பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பிறகு செல்வராஜ், தன்னுடைய கள்ளக்காதலியை ரகசியமாக சந்தித்து வந்தார்.
தீர்த்துக்கட்ட முடிவு
அப்படி இருந்தும் செல்வம், இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே செல்வத்தை தீர்த்துக்கட்ட செல்வராஜ் காத்திருந்ததாகவும், அதன்படியே வீரகனூர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் செல்வம் செல்வதை நோட்டமிட்டு அவரிடம் தகராறு செய்து ெசல்வராஜ் தீர்த்துக்கட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
கைதான செல்வராஜ் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து கொண்டவர். இதில் 2-வது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்தவர் என கூறப்படுகிறது. இதற்கிடையே 3-வதாக செல்வத்தின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தலைவாசல் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவிக்கு ெதாடர்பா?
மேலும் செல்வம் கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக செல்வராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.