பாரம்பரிய நெல் விதைகளில் கலப்படம்
பாரம்பரிய நெல் விதைகளில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் அடங்கிய கையேட்டினை வழங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
ஏகாம்பரநல்லூர் பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் விதைகளை கொண்டு கடந்த தை மாதத்தில் சீரக சம்பா நெல் பயிரிட்டோம். ஆனால் இது நாள் வரையில் அந்த நெற்பயிர் வளர்ந்து கொண்டேதான் செல்கிறதே தவிர நெல்மணி வரவே இல்லை என விவசாயிகள் நெற்பயிர் மற்றும் விதைகளை கொண்டு வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.
கலப்படம்
அப்போது வேளாண் துறை மூலம் பாரம்பரிய நெல் விதைகளிலும் கலப்படம் செய்து வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டினர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள வேளாண் துறை இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதேபோல கடலை மற்றும் இதர விதைகளிலும் கலப்படங்கள் அதிக அளவில் இருப்பதால் வேளாண்மைத் துறை மூலம் விதைகள் வாங்குவதற்கு நம்பிக்கையில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
அனைத்து வேளாண் துறை விற்பனை நிலையங்களிலும் விதைகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்து அதற்கான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கால்நடை மருந்தகம்
விவசாயி:- சுமைதாங்கி பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி 22 நாட்களுக்கு மேலாகியும் பணம் பட்டுவாடா செய்யவில்லை. காட்டுப்பாக்கம் கிராமத்தில் வெள்ள நிவாரண உதவித்தொகை 2 வருடம் ஆகியும் கிடைக்கவில்லை.
ஒரே விவசாயி ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் இரண்டு மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என அரசு ஆணை உள்ளது. ஆனால் எனக்கு இரண்டாவது மின் இணைப்பு வழங்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் இதுநாள் வரையில் கிடைக்கவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 மணி நேரமும் கால்நடை மருந்தகம் செயல்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் இது நடைமுறையில் உள்ளது. புதிய மாவட்டத்தில் இது நடைமுறையில் இல்லை.
தோல் கழிவுகள்
அனந்தலை ஊராட்சியில் தொடர்ந்து கல்குவாரிகள் இயங்கி வருவதால் பள்ளி வளாகங்கள் மற்றும் விவசாய நிலங்களில் மாசு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுகளை வெளியேற்றம் செய்வதை தடுத்து நிறுத்தவும், நீர் வெளியேற்றம் செய்யும் கால்வாய்களில் முட்புதர்களை அகற்றி கழிவுநீர் கலக்கப்படாமல் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.
கலெக்டர்:- மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக உரிய ஆய்வு செய்து முட்புதர்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் கழிவு நீர் கலக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி அனைத்து வட்டங்களிலும் நீர்வரத்துப் பகுதிகள் தூர்வாரப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் வருகின்றது. பொதுமக்கள் அதில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் கால்நடைத் துறை சார்பில் கால்நடைகளுக்கான தீவனப் புல் வகைகள், கால்நடைகள் நோய்வாய்ப்படும் பொழுது கொடுக்க வேண்டிய மருந்துகள், தாது உப்புகளின் பயன்கள். தீவன மேலாண்மை முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை கலெக்டர் பார்வையிட்டார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.