அமைச்சர் உதயநிதி கருத்துடன் ஒத்துப்போகிறேன்
சாதிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி கருத்துடன் ஒத்துப்போகிறேன் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் நேற்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடைமுறை பேச்சு வழக்கில் இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதிகாரபூர்வமாக முழுவதும் மாற்றுவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். எனவே அது சாத்தியமில்லை. "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு சாத்தியமில்லாதது. தமிழ்நாட்டில் அரசியல் மேடையில் பேசப்படும் சனாதனம் என்பது நமது வழிபாட்டு முறை அல்லது கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல. சமுதாயத்தில் நிலவும் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றியதுதான். சாதிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆகியோர் புதிதாக சனாதனத்துக்கு கொடி பிடிக்கிறார்கள் என்றார். இதைதொடர்ந்து திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கினார். அப்போது அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.