தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
நாட்டில் வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை - பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்படி, தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், மதுரையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேல்மட்டச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதனைத் தவிர்த்து, தாம்பரம் - செங்கோட்டை இடையிலான விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் வீடு தமிழ்நாடு. மொழி மற்றும் இலக்கியத்திற்கான நிலம் தமிழ்நாடு. தேசியம் மற்றும் நாட்டுப்பற்றுக்கான மையம் தமிழ்நாடு. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த முன்னணி தலைவர்கள் பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. எனவே, இது புதிய நம்பிக்கை, ஆற்றல், எதிர்பார்ப்பு, ஆரம்பத்துக்கான நேரம். புதிய தலைமுறையினருக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல புதிய திட்டங்களுக்கான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டுள்ளன. சாலை, ரெயில் வழித்தடங்கள், விமான மார்க்கத்தை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான உற்சாகத்தை அதிகரிக்கும்.
கடந்த சில ஆண்டுகள், உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியா ஒரு புரட்சியை சந்தித்து வருகிறது. இது வேகத்துடன் அளவு என்ற வகையிலும் உயர்ந்து வருகிறது. அளவு எனும்போது, நடப்பாண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டின் உள்கட்டமைப்பு முதலீட்டிற்காக, 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சாதனை படைத்திருக்கிறோம். இது கடந்த 2014-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட, 5 மடங்கு அதிகமாகும். ரெயில்வே கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டத் தொகையும் இதுவரை ஒதுக்கப்படாத சாதனை தொகையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையின் நீளமானது 2014-க்கு முந்தைய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட இரண்டு பங்கு அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டிற்கு முன்பாக, ஒவ்வொரு ஆண்டும் 600 கி.மீ. ரயில் பாதைதள் மின்மயமாக்கப்பட்டன.
இன்று 4000 கி.மீ என்ற அளவை எட்டி வருகிறது. 2014-ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ஆகும். 2014-க்குப் பிறகு இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கி கிட்டத்தட்ட 150 ஆக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் கடற்கரை நீளமானது. இது வணிகத்திற்கு மிகவும் முக்கியமானது. 2014-ம் ஆண்டுக்கு முந்தையக் காலக்கட்டத்தோடு நாம் ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் திறன் மேம்பாடு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியிருக்கிறது. நாட்டின் வெளிப்புற கட்டமைப்புகளில் வேகமும், அளவும் மட்டுமே கணக்கிடப்படுவது இல்லை. சமூக வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளிலும் இவை காணப்படுகிறது.
2014-ம் ஆண்டைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 380. இன்று இந்த எண்ணிக்கை 660 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகிலேயே விலை மலிவான டேட்டாக்கள் இந்தியாவிடம் உள்ளது. 6 லட்சம் கி.மீட்டருக்கு அதிகமாக கண்ணாடி இழை கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அளவில் நகர்ப்புறங்களில் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கிராமப்புறங்களில் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பணிக் கலாச்சாரம், தொலைநோக்குப் பார்வைதான், இத்தனை சாதனைகளையும் சாத்தியமாக்கியது.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில், உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு என்றால், தாமதம் என்பதே விதியாக இருந்து வந்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. தாமதங்களில் இருந்து கொண்டு சேர்த்தல் என்ற முறையில் தற்போதைய பணிக் கலாச்சாரம் இருந்து வருகிறது.
நாட்டில் வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு. குறிக்கப்பட்ட காலக்கெடுவை முன்னிறுத்தி நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறித்த காலத்திற்கு முன்னதாகவே இலக்குகளை எட்டுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.