"கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன்" - தமிழிசை சவுந்தரராஜன்


கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன் - தமிழிசை சவுந்தரராஜன்
x

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார்.

அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவுக்கும், அவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதற்கிடையே, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. தெலுங்கானா மாநில அரசுடன் சுமுக உறவு இல்லாததால், பெரும்பாலும் அவர் புதுச்சேரியிலேயே தங்கி இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழிசை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் வாழ்க்கைக்கு திரும்பப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தனது 2 மாநில கவர்னர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்த சூழலில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக தமிழிசை சவுந்தரராஜன் கமலாலயம் வந்தார். அவரை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மேலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தம்பி அண்ணாமலை சொல்லும் போது கஷ்டமான ஒரு முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கூறினார். ஆமாம்..! கஷ்டமான முடிவுதான். ஆனால், கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன்.

அண்ணாமலையின் கரங்களை சாமானிய தொண்டனாக இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வலுப்படுத்துவேன். எனது கடுமையான உழைப்பு பா.ஜனதாவோடு இருக்கும். மீண்டும் இந்த தமிழிசை உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக வந்துள்ளேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை கட்சியிடம் தெரிவித்தேன். எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அதில் களமிறங்குவேன். மக்கள் பணி செய்ய வேண்டும் என்று ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. நானூறு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கிறேன்.

பா.ஜனதா அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சியை பார்க்க முடியாது. நிர்வாகங்களில் பெண்களுக்கு பா.ஜனதா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கவர்னராக பணியாற்றிய காலங்கள் மிகப்பெரிய நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளேன்.

நான் சென்ற பிறகு தமிழகத்தில் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்த தேர்தலில் மிக சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளார்கள். தாமரை தமிழகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது. மிக அபரிமிதமான வளர்ச்சியை தமிழக பா.ஜனதா பெற்றுள்ளது. அதற்கு பிரதமர் மோடியின் தமிழக கூட்டங்களே சாட்சி. கடந்த காலங்களில் தி.மு.க. மீது நிறைய விமர்சனங்கள் உள்ளன. கவர்னராக இருந்ததால் அதை வெளியில் சொல்லவில்லை" என்று அவர் தெரிவித்தார்.


Next Story