சொத்தை எழுதி தராததால் தாத்தா, பாட்டியை கொன்றேன்


சொத்தை எழுதி தராததால் தாத்தா, பாட்டியை கொன்றேன்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சொத்தை எழுதி தராததால் தாத்தா, பாட்டியை கொன்றேன் என்று கைதான பேரன் கூறியுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

வயதான தம்பதியினர் கொலை

விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலுவு (வயது 80), இவருடைய மனைவி மணி (65). இவர்கள் இருவரும் கடந்த 16-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கலுவுவின் மகனான கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வரும் முருகனின் மகன் அருள்சக்தி(19) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கோவையில் பதுங்கி இருந்தார்

இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர் கோவையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அருள்சக்தியை மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

சொத்தை எழுதி கேட்டு தொந்தரவு

கலுவு- மணி தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும், 10 பேரன், பேத்திகளும் உள்ளனர். கலுவு, மணி ஆகியோர் பில்லூரில் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது பெயரில் வீட்டின் அருகிலேயே 3 சென்ட் மனை உள்ளது.

இதற்கிடையே ஒரு கடையில் கூலி வேலை பார்த்து வரும் அருள்சக்தி அடிக்கடி பில்லூருக்கு சென்று தாத்தா, பாட்டியை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர், இந்த வீட்டையும், வீட்டுமனையையும் தனது பெயருக்கு எழுதி தரும்படி தாத்தா- பாட்டியிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அவர்கள் அருள்சக்திக்கு சொத்தை எழுதி வைக்கவில்லை. மேலும் அருள்சக்தி, அடிக்கடி தாத்தா- பாட்டியிடம் மது குடிப்பதற்கும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

பணம் கேட்டு பிரச்சினை

சம்பவத்தன்று தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்ற அருள்சக்தி, அவர்களிடம் மது குடிக்க பணம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர். மேலும் அருள்சக்தியை அவரது பாட்டி மணி கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அருள்சக்தி, குளிர்பானத்துடன் கலந்திருந்த மதுவை அவரது தாத்தா கலுவுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்ததோடு அவரை, தனது கையால் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இதை தடுக்க வந்த பாட்டி மணியையும், அருள்சக்தி கழுத்தை நெரித்துக்கொன்றுள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்திருந்த இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்தனர். தொடர்ந்து, அருள்சக்தியை கைது செய்தனர்.


Next Story